தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குவேன்- தமிழில் உறுதியளித்தார் கோட்டாபய

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, தமிழ் மொழியில் உறுதியளித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் எனது அரசாங்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொட்டகலை விளையாட்டு மைதானத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டில் அதி குறைந்த வருமானத்தை பெற்று, வாழ்வாதார சுமையுடன் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளையும் அபிவிருத்தி பணிகளையும் நான் முன்னெடுப்பேன்.

அந்தவகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நான் வழங்குவேன்.

அதேநேரத்தில் நாட்டில் குறைந்த வருமானத்தை பெறுவோர் சமூர்த்தி உதவி தொகைகள் கிடைக்கப்பெற்றோர் மற்றும் கிடைக்கப்பெறாதோர் போன்றவர்களுக்கும் நோய்களை அனுபவித்து வரும் வறியவர்களுக்கும் மாதாந்தம் பருப்பு, நெத்திலி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களை இலவசமாக வழங்குவேன்.

பல்கலைகழக கல்வியை மேற்கொள்ள ஆசைப்படும் மலையக கல்வி சமூகத்தினருக்கு கல்வியை விருத்தி செய்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். மலையகத்தில் பல்கலைகழகங்களை உருவாக்குவேன்.

இதேவேளை தேயிலை தொழிலை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தில் வேலைத்திட்டம் ஒன்றை கொண்டு வருவேன். நீண்ட காலமாக பழைய முறையிலான குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு என்னுடைய 5 வருட ஆட்சியில் புதிய வீடுகளை அமைத்து கொடுப்பேன்.

அத்துடன் மலையக பிரதேசங்களை உல்லாச பயண பிரதேசங்களாக அபிவிருத்தி செய்வதுடன் வெளிநாடு உல்லாச பயணிகளை பெருமளவு வரவழைக்கும் பட்சத்தில் அதனூடாக மலையக பிரதேச பிள்ளைகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் தாம் கற்ற கல்வியின் அடிப்படையில் அரசாங்க உத்தியோகங்களையும் வழங்குவதற்கு நான் உறுதி கூறுகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.