தொலைந்துபோன எமது அடையாளங்களைப்பெற தொடர்பாடல்களும் அவசியம்- அங்கஜன்

தொலைந்துபோன எமது அடையாளங்களைப்பெற சிறந்த தொடர்பாடல்களும் இன்றியமையாதது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் மக்கள் தொடர்பாடல் நிகழ்வு யாழப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கல்வியில் நாம் பின்னடைவை எதிர்நோக்கவில்லை ஆனாலும் எம்மைவிட பலர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனவே இழந்தவற்றை மீள அடைவதற்கும் பொருளாதார ரீதியாக எமது பிரதேசத்தை முன்நோக்கி நகர்த்த சிறந்த தொடர்பாடல்களும் இன்றியமையாதது. அதற்கான ஆளுமைகளையும் திறமைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விவசாயம், மீன்பிடி, போன்ற துறைகளிலும் நாம் வலிமையடைய வேண்டும். தொலைந்துபோன எமது அடையாளங்களை, பண்பாடுகளை, கல்வியினை மீண்டும் மிளிரச் செய்ய வேண்டும்.

அதற்காக எமது ஜனாதிபதியினால் பல்வேறு வலையமைப்புக்கள் ஊடாகவும் தேசிய செயற்திட்டங்கள் ஊடாகவும் அங்கமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.