தொடர் புறக்கணிப்பின் எதிரொலி! மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு?

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் மீறப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட ரீதியில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் ரீதியான தாக்குதல்களை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தொடர்ந்தும் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, மூன்று வீடுகளை ஒன்றாக இணைத்து நிர்மாணிக்கப்பட்ட தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த வெளியிட்டுள்ள அமைச்சரவை பத்திரம், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் 94 அதிரடிப்படையினர் மற்றும் 46 பொலிஸாரை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை என்பன முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும் அரசாங்கத்திற்கு 149 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். இவர்களில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.