தேவையற்ற ஆட்சேர்ப்புக்களை கடந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது – மஹிந்த!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தவறான நடைமுறைகளைப் பயன்படுத்தி பலர் மத்திய கலாச்சார நிதிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் கீழ் நடத்தப்பட்ட புத்த சாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு அப்பால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

மேலும் மக்காவுக்குச் செல்லும் முஸ்லீம் மக்களுக்கு சலுகைகளை வழங்கும்போது குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் மக்காவிற்கு ஒரு முறை கூட பயணம் செய்யாதவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்தோடு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் அறிவுறுத்தலின் பேரில் கத்தோலிக்க நிகழ்வுகள் பெரியளவில் நடத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் பாரிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.