தேர்தல் வெற்றியினூடாகவே போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்கிறது அமெரிக்கா!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றிற்கும், ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி, ஆதவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தாம் அமெரிக்க குழுவிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் போராளிகள் அரசியல் ரீதியாக ஒரு தேர்தல் வெற்றியை பெறுவதன் ஊடாகவே அவர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் முக்கியத்துவம் பெரும் என அமெரிக்க அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜேம்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.