தேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்

தேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் விருப்பு வாக்கு முடிவுகளை 7ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னரும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நபடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கு அமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 3652 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்களைச் சேர்ந்த 3800 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

மேலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பில் 7 , 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.