தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் – துமிந்த

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் காலங்களின் போது புதிய அரசியலமைப்பிற்கூடாக தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய எமது கடமையாகும்.

எனினும் எமது நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இன்றும் அந்த நெருக்கடி நிலைமை முற்றாக குறைவடையவில்லை.

எனவே தான் இவ்வாறான சூழலில் எஞ்சியுள்ள ஒரு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனை புதிய அரசியலமைப்பு இனி உருவாகாது என தவறாக புரிந்துகொள்ளக் கூடாது’ என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.