தேர்தல் கடமைகளால் பொதுமக்கள் சேவை பாதிக்கப்படக்கூடாது – ஜனாதிபதி

தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்க நிறுவனங்களினூடாக மேற்கொள்ளப்படும் நாளாந்த மக்கள் சேவைகள் எந்த வகையிலும் தாமதமாகக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்ற பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அரச நிறுவனத்திடமும் உள்ள சொத்துக்கள் அல்லது வாகனங்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்த இடமளிக்காதிருப்பது அமைச்சுக்களின் செயலாளர்களினது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புதிய வருடத்தின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் திட்டங்களை வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த வருடம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாது மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டிருக்குமானால் அது குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் கூறியுள்ளன.

அனைத்து அமைச்சுக்களிலும் ஊடகப் பிரிவொன்றை அமைத்து அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமது அமைச்சுக்களுக்கான துறைகள் குறித்து வெளிநாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது அமைச்சுக்களின் செயலாளர்களது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வருடாந்த வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விதி முறைமையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றை பராமரித்தல் தொடர்பாக முறைமை ஒன்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கம் மாறுகின்றபோது வாகனங்கள் இல்லாமல் போகும் நிலமையை இதன் மூலம் நிவர்த்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி ஆற்றங்கரை பிரதேசங்கள் அழிவடைவது தொடர்பாக கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சும் நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நாளுக்குநாள் சனத்தொகை அதிகரித்துவரும் நாடு என்ற வகையில் காணிகள் தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் காணிகள் தொடர்பில் உரிய கொள்கைகள் பின்பற்றப்படாமையாகும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY