தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐ.தே.க. அஞ்சுகிறது: தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சி பல காரணங்களைக் காரணம் காட்டி தேர்தல்களைப் பிற்போடுவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இது தேர்தல் தொடர்பாக அக்கட்சிக்கு எழுந்துள்ள தோல்விப் பயமே ஆகும்.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இவ்வாறு செயற்படுமாக இருந்தால் நாம் இது தொடர்பாக முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. எமக்கும் இந்த விடயத்தில் பிரச்சினையொன்று இருக்கின்றது.

ஓவ்வொரு தரப்பினரும், ஒவ்வொருவரின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தான் களமிறக்க வேண்டும் என்றுத் தீர்மானித்திருக்கிறோம்.

கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் தயார் என்றார் தானும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயார் என்றுக் கூறியுள்ளார். நானும், அவ்வாறே கூறுகிறேன். ஜனாதிபதித் தேர்லுக்காக வேலை செய்வதற்கு மக்கள் தயார் என்றால் நானும் தயார்.

கோட்டாபய ராஜபக்ஷ எந்தவொரு இடத்திலும் வேட்பாளராகத் தயார் என்று கூறவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இப்போது அவசரப்படவேண்டிய அவசியமில்லை” என அவர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.