தேர்தலுக்கு முன்னர் சட்ட உருவாக்கமொன்றை கோரும் பெப்ரல் அமைப்பு

அடுத்துவரவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் தொடர்பான சட்ட ஊருவாக்கமொன்றை கொண்டுவர வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.

அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய நிதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என தேர்தலை கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் தமது தொகுதியில் வெற்றி பெறுவதற்காக 40 கோடி ரூபாயை செலவிட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக சிறந்த பிரஜைகள் தெரிவு செய்யப்படாது செல்வந்தர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே இதனை தடுப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய நிதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய சட்ட உருவாக்கத்தை அவர் கோரியுள்ளார்.