தேர்தலில் இருந்து விலகிய மங்கள: உருவாக்கும் புதிய அமைப்பு!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் சமூக அமைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீரவுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இம்முறை பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை மாற்றிக்கொண்ட அவர் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துடன் இம்முறை தேர்தலில் தனக்கு விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டாம் எனவும் மாத்தறை மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர அந்த கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்ததுடன் அவருக்கு விருப்பு வாக்கு இலக்கமாக 8 வழங்கப்பட்டிருந்தது.

சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வந்த அவர், சில பௌத்த பிக்குகள் பௌத்த தர்மத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் காவிதாரிகள் என குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனால் அரசியலுடன் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குகள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.