தேசிய கொள்கை இல்லாத ஆட்சி நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் – ரவி

தேசிய கொள்கை இல்லாத ஆட்சி நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க எச்சரித்துள்ளார்.

சமய நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சடுதியாக குறைந்துள்ளது எனக் கூறினார்.

தற்போது சின்னம் தொடர்பாக எமக்குள் பிரச்சினை இருப்பதாக கூறப்பட்டாலும் இந்த விவகாரம் செயற்குழுவால் தீர்மானிக்கப்படும் என்றும் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதற்கிடையில், தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதால், சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி புதிய அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சில நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதாக அரசாங்கம் கூறியிருந்தபோதும் தற்போது பெரிய முன்னேற்றம் இல்லாமல் 100 நாட்கள் ஆகிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது எளிதான காரியமல்ல, அதே நேரத்தில் ஆட்சியை கொண்டுசெல்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ரவி கருணநாயக்க குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் ஒரு தேசிய கொள்கை கட்டமைப்பின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவில்லை என்றால், நாடு வீழ்ச்சியடையும் என்று அவர் எச்சரித்தார்.