தேசிய இனங்களுக்கிடையில் அரபை புகுத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்: சுரேஸ்

தமிழ்- சிங்களம் என்ற இலங்கையின் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில், அரபு மொழியை திணிக்க எவரேனும் முற்படுவார்களாயின் அது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே சுரேஸ் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அந்தவகையில் முஸ்லிம் தலைவர்களான ஹிஸ்புல்லாஹ், ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி போன்றவர்கள் மீது மக்களும் பெரும்பாலான அரசியல்வாதிகளும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் மீது எந்ததொரு முறையான விசாரணைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதே அனைவரின் அதிருப்தியாகவும் உள்ளது.

இதேவேளை, நாட்டில் தமிழ், சிங்களம் என இரண்டு தேசிய இனங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று தமிழும் சிங்களமுமே தேசிய மொழிகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே அரபு தேசத்திலிருந்து கொண்டுவந்த அடையாளங்களையோ இஸ்லாமிய கலாசாரத்தையோ உட்புகுத்தினால் பல குழப்பகரமான சூழ்நிலை ஏற்படும் என்பதை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நன்கு உணர்த்தியுள்ளன.

ஆகையால் நாட்டிற்கு அரபு மொழி அவசியமில்லை என்பதே அனைத்து மக்களின் நிலைப்பாடாகும்” என சுரேஸ் தெரிவித்துள்ளார்.