தேசிய அரசுக்கும் குழப்பம்! – சமரசப் பேச்சில் சந்திரிகா

தேசிய அரசின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே கருத்து முரண்பாடு வலுத்து வருவதால் இருதரப்பினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரமாக இறங்கியுள்ளார்.
நல்லாட்சி உதயமாவதற்குப் பிரதான வகிபாகத்தை வகித்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே, சமாதானத் தூதுவராக அவர் களமிறங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.
பிணைமுறி விவகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக விமர்சித்து வருகின்றமை, ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள், மஹிந்தவையும், மைத்திரியையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சு உட்பட மேலும் சில காரணங்களாலேயே இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
இதைப் பகிரங்கப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். “பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை அமைத்ததால் அரசுக்குள்ளேயே எனக்கு எதிராக விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. எனவே, பதவியைத் துறந்துவிட்டாவது, மக்களுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராடுவேன்” என்று கூறியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களை இலக்குவைத்தே ஜனாதிபதி கடுந்தொனியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தேசிய அரசியிலிருந்து தமது கட்சி வெளியேறும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், சு.க. வெளியேறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டு வருவதால் கூட்டரசுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு அது கலைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளமையே இந்த அச்சத்துக்குப் பிரதான காரணமாகும்.
எனவே, ஜனாதிபதியின் சீற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதன்படி கடந்த 26 ஆம் திகதி பிரதமரின் விசேட செய்தியுடன் அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதியை சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பின்னர் கண்டியில் வைத்து மலிக் சமரவிக்கிரமவுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையிலேயே, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளைக் களையச்செய்து, கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டு வரை தொடரவைக்கும் வகையில் சந்திரிகா அம்மையாளர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY