தேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு உறுப்பினருடன் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே ஐதேக இந்த யோசனையை முன்வைத்திருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேவேளை, இந்த தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, அதிபர் சிறிசேனவின் அனுமதிக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் காத்திருக்கின்றனர் என மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசநாயக்க தற்போது கூட தேசிய அரசாங்கம் தான் பதவியில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிடினும் கட்சியின் தலைவரான, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறார் என்றும், அவர் கூறியுள்ளார்.

இதனிடையே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமது கட்சிக்கு இன்னமும் எந்த அதிகாரபூர்வ அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.