தேசிய அரசாங்கம் தொடர்பில் பேச்சு நடத்த நாளை மைத்திரியுடன் முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளது.

நாளை(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக பணியாற்றிய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தமது தொகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர்.

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிர கரிசனை கொண்டுள்ளனர். இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குறித்த விடயமானது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.