தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக கூறுவது கேலிக்கூத்தான செயல் என்கிறார் மஹிந்த!

நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக கூறுவது கேலிக்கூத்தான செயலென முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தேசிய அரசாங்கம் என்று மக்களை ஏமாற்றி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசியலமைப்பினை காப்போம் என மார்த்தட்டி, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்தவர்கள். இப்பொழுது அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

அவ்வாறு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து 113 உறுப்பினர்களின் ஆதரவினைத் திரட்டவே முயற்சிக்கின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.