தெரிவுக்குழு விசாரணையில் ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து – ஸ்ரீ.சு.க.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், தெரிவுக்குழுவில் இடம்பெறும் விடயங்களை வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் அங்கு இடம்பெறுபவை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றமையும் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறிப்பிட்டுள்ளது.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், புலனாய்வு அதிகாரிகளையும் வரவழைத்து முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வது இது வரையில் எந்த நாடுகளிலும் இடம்பெற்றதில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கும் விடயங்களை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்கள் எனவும் கூறினார்.

ஆனால் எமது நாட்டில் சாதாரண பொதுமக்களுக்கு உள்ள சிந்தனை கூட அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது கவலைக்குரிய விடயம் என மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.