தெரிவுக்குழு விசாரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் இந்த தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் உதவியுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது.

இந்த தெரிவுக்குழுவை அமைப்பதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

றிசாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, கோரி, தெரிவுக்குழு அமைக்கும் யோசனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

எனினும், அதனைப் பொருட்படுத்தாமல், தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன முன்வைத்திருந்தார்.

அந்தப் பிரேரணையில், திருத்தம் செய்யப்பட்டு, தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் உதவியுள்ளனரா என்பது குறித்தும் தெரிவுக்குழு விசாரிக்க வேணண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையில், ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் 40இற்கும் அதிகமான உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.