தென் சீனக்கடல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் டிரம்ப் அறிவிப்பு

சீனாவின் தென்பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கை தீவுகளையும் உருவாக்கி உள்ளது. அத்துடன் அந்தப் பகுதியை ராணுவ மயமாக்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து இந்த வழியே நடைபெறுவதால், முக்கியத்துவம் பெற்றுள்ள தென் சீனக்கடலில் சீனாவுடன், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வியட்நாம் சென்றார். அங்கு தனாங் நகரில் நடைபெற்ற ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ஹனோய் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங்கை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் டிரம்ப், “தென் சீனக்கடல் பிரச்சினையில் நான் மத்தியஸ்தம் செய்ய முடியுமா அல்லது நடுவராக இருக்க வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள். இதில் நான் மத்தியஸ்தம் செய்து வைக்க தயார்” என்று கூறினார்.

மேலும், “தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு பிரச்சினைக்குரியதுதான்” என்றும் டிரம்ப், டிரான் டாய் குவாங்கிடம் ஒப்புக்கொண்டார்.

அப்போது டிரம்பிடம் டிரான் டாய் குவாங்க், “அமைதியான பேச்சு வார்த்தை மூலமாகவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் இந்தப் பிரச்சினையை வியட்நாம் கையாள்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நல்ல முறையில் பேச்சு வார்த்தை நடத்தியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் குறிப்பிட்ட டிரம்ப், “வெறுப்பவர்களும், முட்டாள்களும்தான் எங்கள் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஊக்குவிக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாமிலும் வடகொரியாவுக்கு எதிரான வார்த்தை யுத்தத்தை டிரம்ப் தொடர்ந்தார். டிரம்பின் ஆசிய நாடுகள் சுற்றுப்பயணம், யுத்த வெறியரின் பயணம் என்று வடகொரியா கருத்து தெரிவித்தது. மேலும், முதுமையில் மனத்தளர்ச்சி அடைந்தவர் என்றும் டிரம்பை வடகொரியா சாடியது. அதற்கு டிரம்ப் பதில் அளிக்கிறவிதத்தில் டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார்.

அதில் அவர், “ என்னை முதியவர் என்று கூறி கிம் ஜாங் அன் தொடர்ந்து அவமதிக்கிறார்? நான் அவரை ஒரு போதும் குள்ளமானவர், குண்டர் என்று கூறவில்லையே… அவரை எனது நண்பர் ஆக்குவதற்கு கடினமாக முயற்சிக்கிறேன். என்றாவது ஒரு நாள் இது நடந்தே தீரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது டிரம்பிடம், “ வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உங்களால் நண்பராக பார்க்க முடிகிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டிரம்ப், “அது ஒரு வினோதமான செயலாக இருக்கக்கூடும். ஆனால் அதற்கு சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி நடந்தால் அது நல்ல விஷயம்தான். வடகொரியாவுக்காக உங்களிடம் சொல்கிறேன். பிற இடங்களுக்கு வடகொரியாவும் நல்லதொரு இடமாக திகழ முடியும். உலகின் பிற நாடுகளுக்கு வடகொரியா நல்ல நாடாக விளங்க முடியும்” என்று பதில் அளித்தார்.

LEAVE A REPLY