தென்ஆப்பிரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு – இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் பீட்டர் மரிட்ஷ் பர்க் நகரை சேர்ந்தவர் ஆசிஷ் மாஞ்ஜ்ரா (45). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா சென்று தங்கினார்.

அங்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கோரி பீபி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஷூபீனா (18), மைருன்சிசா (14), முகமது ரிஷ்வான் (10) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.

ஆசீஷ் மாஞ்ஜ்ரா ஒரு கடையில் பணிபுரிந்தார். அதில் கிடைக்கும் சம்பள பணத்தில் மிச்சம் வைத்து சொந்தமாக வீடு வாங்கினார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டில் அவர்கள் குடியேறினர்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது யாரோ மர்ம நபர் மாஞ்ஜ்ரா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு ஓடிவிட்டான்.

அதில் வீடு முழுவதும் எரிந்தது. இச்சம்பவத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆசீஷ் மாஞ்ஜ்ரா அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இந்த கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அதிகாலை 2 மணியளவில் பக்கத்து வீட்டின் கூரை மீது ஏறிச் சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY