துரோகத்தால் இருண்ட யுகத்துக்குள் இலங்கை – கடுமையாக சாடும் சரவணபவன்

20ஆவது திருத்தம் நிறைவேறிவிட்டது எனும் துயரை விட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த துரோகமே அதிக வலியை மக்களிடத்தே உண்டாக்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்ற வாக்கெடுப்புகளால் 20ஆம் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது நாட்டின் தலையெழுத்தை மாற்றி, இருண்ட யுகத்துக்குள் நாட்டை தள்ளியுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதால், ஒக்டோபர் 22 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது.

தனிப்பட்ட ஒருவரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொடுத்து, ஜனநாயக ரீதியில் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் 20ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.

ஜனநாயகத்தின் பேரைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் சதியை ராஜபக்ஷாக்களின் திட்டமிட்டபடி நிறைவேற்றியுள்ளனர்.

இதன் விளைவை ஒட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான நிலை தோன்றியுள்ளது.

இந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து – முதுகில் குத்திவிட்டு கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே முக்கியமான காரணம். அவர்களில் 6 பேர் முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்தகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா ஆகிய எட்டுப்பேர் இத் துரோகத்தைப் புரிந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி மலர துணைபோயுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் முஸ்லிம் மக்களை ஈவிரக்கம் இல்லாமல், ஐந்தறிவு ஜந்துக்கள் போல நடத்துவதற்கும், கலவரங்களைத் தூண்டி விட்டு இழப்புக்களை ஏற்படுத்துவதற்கும் சூத்திரதாரிகளான ராஜபக்ஷாக்களுக்கு, அதே முஸ்லிம்களின் பிரதிநிதிகள் தோள் கொடுக்க எப்படி முடிந்தது?

அவ்வளவு எளிதில் தங்கள் இனத்துக்கு ராஜபக்ஷாக்கள் இழைத்த கொடுமைகளை மறந்துவிட்டு, சுயநலத்துக்காக ஒட்டிக்கொள்பவர்களை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என அழைக்கமுடியுமா?

அதேபோன்று தான் அரவிந்தகுமாரும், 20ஆவது திருத்தத்துக்காக ராஜபக்ஷாக்களுக்கு அடிமையானதன் மூலம் தனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு அவர் துரோகமிழைத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னமும் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க மனமில்லாமல் நாடகமாடும் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தன் மீது பெரும் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள 20ஆம் திருத்தத்தை நிறைவேற்ற துணைபோனதன் மூலம் இந்த எட்டுப் பேரும் செய்த துரோகத்தை மக்கள் மன்னித்தாலும், வரலாறும் எதிர்காலமும் அவர்களை மன்னிக்கப் போவதில்லை”என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.