துணை அதிபர் கைது விவகார எதிரொலி: பதற்றம் வேண்டாம்; மக்களுக்கு மாலத்தீவு அதிபர் வேண்டுகோள்

18மாலத்தீவு துணை அதிபர் தேசத் துரோகக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதையடுத்து, மக்கள் பதற்றம் அடையாமல் அமைதி காக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யமீனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு துணை அதிபர் அகமது அதீப் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டிலும் அவரது இரு மனைவிகளின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அந்த நாட்டில் அரசியல் ரீதியாகவும் பொதுமக்களிடையேயும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அனைத்து தரப்பினரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்க அதிபர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தொலைக்காட்சியில் அவர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய உரையில் தெரிவித்ததாவது: தேசத் துரோக குற்றத்துக்காக துணை அதிபர் அகமது அதீப் கைது செய்யப்பட்டது நாட்டில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலத்தீவு மக்கள் பதற்றம் அடையாமல் அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் அப்துல்லா யமீன் கூறினார். கடந்த மாதம் அதிபர் அப்துல்லா யமீன் பயணம் செய்த சொகுசுப் படகில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காயமின்றி அதிபர் அப்துல்லா யமீன் தப்பினார்.
அதிபரைப் படுகொலை செய்யும் நோக்கத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்த நிலையில், அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்று சனிக்கிழமை (அக்.24) மதியம் நாடு திரும்பிய துணை அதிபர் அகமது அதீப் திடீரென விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிபரைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய அவர் தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
33 வயதான அகமது அதீப், அந்நாட்டு அதிபரால் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் துணை அதிபர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

LEAVE A REPLY