துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: தமிழக ஆளுநர்!

தமிழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு, இன்று (சனிக்கிழமை) சென்னையில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபா பணம் புரண்டது எனக் கூறிய அவர் அதனை கண்டு தான் மனவருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த ஊழல் நடவடிக்கையை தான் மாற்ற முயன்றதாகவும், எனினும் இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் துணைவேந்தர் பதவி என்பது தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்றும், அதை விடுத்து கல்விக்குள் பணம் புரளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டக்கல்லூரிக்கான மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருமே தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்புக்கள் கிளம்பியது.

இதன்போது, குறித்த நியமனத்தில் பல கோடி ரூபா பணம் புரண்டுள்ளது என்றும், ஊழல் கல்விக்குள் புகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

எனினும் அனைத்து எதிர்ப்பையும் கடந்து தற்போதை துணை வேந்தர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு தான் பதவியேற்க முன்னர், துணைவேந்தர் நியமனத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றதாக ஆளுநர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஆளுநர் பன்வாரிலால் போராஹித்தும் பிற மாநிலத்தை செர்ந்தவர் என்பதால் அவர் தமிழக ஆளுநராக வருவதற்கும் எதிர்ப்புக்கள் கிளம்பியதோடு, அவரின் நியமனத்திலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.