தி.மு.க.வுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு அவர்கள் எதிரிகள் தான்: செல்லூர் ராஜூ

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17-ந் தேதி மதுரை வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

இது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவர் பேசியதாவது:-

மதுரை என்றைக்குமே அ.தி.மு.க.வின் கோட்டை. உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அமோக வெற்றி பெறுவது நமது இயக்கம் தான்.

இதனை மனதில் வைத்து தான் மறைந்த முதல்-அமைச்சர் அம்மா எனக்கு பின்னரும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்றார். அந்த லட்சிய வார்த்தை தான் தொண்டர்களாகிய நமக்கு ரீங்காரமாக கேட்டுக் கொண்டிருக்கிறது.

அம்மா ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அமைச்சர்களாகிய நாங்களாக இருந்தாலும் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அதில் பாரபட்சம் கிடை யாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் நேசித்த இயக்கம், கட்டிக்காத்த இயக்கம். இந்த இயக்கத்தை என்றைக்கும் பாதுகாப்பது தொண்டர்களாகிய நீங்கள் .

அம்மா நம்மை விட்டு பிரிந்த நிலையிலும் அவர் அறிவித்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார்.

எளியாமையாக யாரும் சந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக அவர் திகழ்கிறார். யார் கோரிக்கை வைத்தாலும் பரிசீலனை செய்து நிறைவேற்றித் தருகிறார்.

அப்படிப்பட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17-ந் தேதி மதுரை வருகிறார். மதுரை மாநகர் பகுதி வரும் அவரை தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்க வேண்டும்.

அம்மா கட்டிக்காத்த இயக்கம் எழுச்சியுடன் தான் இருக்கிறது. தொண்டர்கள் துவண்டுவிட வில்லை என்ற வகையில் வரவேற்பு நிகழ்ச்சி அமைய வேண்டும்.

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் நமது சகோதரர்கள் தான். நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். அவர்கள் எப்போதும் நம்மிடம் வரலாம். ஆனால் தி.மு.க. தான் என்றைக்கும் நமக்கு எதிரி.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் சாதி, மத மோதல்கள் அதிகரித்தன. ஆனால் நம்மை பார்த்து ஊழல் ஆட்சி என்கிறார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். அப்படிப்பட்ட தி.மு.க.வோடு யார் கூட்டணி வைத்தாலும் அவர்களும் நமக்கு எதிரிகள் தான். நம்மை விட்டு பிரிந்து சென்ற சகோதரர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்களும் எதிரிகள் தான்.

அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, கலைச்செல்வம், பிரிட்டோ, பகுதிச் செயலாளர்கள் மாரிச்சாமி, ஜெயவேல், அண்ணாநகர் முருகன், முத்து இருளாண்டி, செந்தில்குமார், கருப்புசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணகி பாஸ்கரன், கலாவதி, முத்துமீனா, லட்சுமி, தாஸ், புதூர் அபுதாகீர், சண்முகவள்ளி, வட்டச் செயலாளர் கே.வி.கே. கண்ணன், தேவதாஸ், சக்தி விநாயகர் பாண்டியன், பஜார் துரைப்பாண்டியன், கார்த்திக் முனியசாமி, கந்தகுமார், கணேசன், ரவி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY