தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர் மல்லை சத்யா மற்றும் மாநில நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதிநீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தால் தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆனையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து மத்திய-மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு பிரதமரிடம் கோரியுள்ள 13,520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

பா.ஜ.க. அரசு இஸ்லாமிய இயக்கங்களின் கருத்தினை அறிய முற்படாமல், முன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து முத்தலாக் தடை சட்டத்தை திணிக்க முயற்சிப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. திராவிட இயக்கத்தை காக்கவும், மாநில சுயாட்சி கொள்கைக்கு வலுவூட்டவும் தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY