திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்

அடுத்த பாராளுமன்றம் திருடர்கள் இல்லாத பாராளுமன்றமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆளும்கட்சி, எதிர்கட்சி எல்லா தரப்பிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கட்சி தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு சிலவேளை “கள்ளர்கள்” என அறியப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டி வரும். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது.

ஆகவே “திருடர்” இல்லாத பாராளுமன்றம் உருவாவது மக்கள் கைகளில்தான் உள்ளது. கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பும் கட்சி சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள் விருப்பு வாக்கை “திருடர்களுக்கு எதிராக” வழங்குங்கள். யார் நல்லவர், வல்லவர் என அறிந்து, அந்த நல்ல, வல்லவர்களுக்கு மட்டுமே விருப்பு வாக்கை வழங்குங்கள். சிங்கள வாக்காளர்கள் மத்தியில் இன்று இந்த சிந்தனை வேகமாக ஒரு இயக்கமாகவே பரவி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த சிந்தனை எழுச்சி பெற வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர், கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியதாவது, எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் விருப்பு வாக்கை கவனமாக வழங்க வேண்டும் என கோர விரும்புகிறேன். அதாவது “மக்கள் வரிப்பணத்தை தம் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு திருடாத”, “வெளிநாட்டு முதலீட்டாளர்களை நிர்பந்தித்து கமிசன் பெறாத”, “மதுசாலை பர்மிட் இல்லாத”, “எதனோல் வர்த்தகம் செய்யாத” வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாத்திரம் தமது விருப்பு வாக்கை மக்கள் வழங்க வேண்டும்.

அதேபோல், “சபையில் பண்புடன் நடந்துக்கொள்கின்ற”, “துணிச்சலுடன் நியாயத்திற்காக குரல் கொடுக்கின்ற”, “விசேடமாக தாய்மார்களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும் நேசிக்கின்ற”, “எதிர்காலம் பற்றிய தூரப்பார்வை கொண்ட”, “மூன்று மொழிகள் முடியாவிட்டால் குறைந்தபட்சம் இரண்டு தேசிய மொழிகளையாவது பேசி உண்மை இலங்கையராக தம்மை அடையாளம் காட்டுகின்ற” வேட்பாளர்களுக்கு மாத்திரம் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்குங்கள்.

இந்த விருப்பு வாக்கு புரட்சி மூலம் அடுத்த ஒன்பதாவது பாராளுமன்றம், “திருடர்கள் இல்லாத” பாராளுமன்றமாக அமையட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். கட்சி, சின்னம் ஆகியவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தாலும் கூட நடைமுறை அரசியல் காரணங்களுக்காக பிழையான நபர்களுக்கு, வேட்பாளர் நியமனங்களை அழுத்தம் காரணமாக் கட்சிகள், கட்சி தலைவர்கள் வழங்கி விடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆகவே கட்சியை, சின்னத்தை மட்டும் பார்த்து, பிழையான நபர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கி விட்டு, பின் அப்படியானவர்கள் இருக்கும் பாராளுமன்றத்தை கண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருடர்கள். 225 பேரும் ஒழிய, அழிய வேண்டும் என சாபம் இடுவதில் பயனில்லை. நல்லவர்களை தெரிவு செய்யத்தான் விருப்பு வாக்கு என்று ஒன்று இருப்பதை மனதில் கொள்ளுங்கள்.

இப்படி திட மனதுடன் சிந்தித்து விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாவிட்டால், என்னை போன்றவர்களுக்கு விடை கொடுங்கள். சபைக்கு சென்று “திருடர்களுடன்” குடும்பம் நடத்த இனியும் எனக்கு முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.