திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்யப்பட்டது

பெளத்தர்களினால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாத்தளையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அலுவிகாரையில் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களுக்கும், எதிர்கால தலைமுறைக்கும் மிகச் சரியாக பாதுகாத்து பேணும் நோக்குடன் மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

சுத்தபீடகம் (பேருரைப்பகுதி) அபி தம்ப பீடகம் (உன்னத கோட்பாட்டு பகுதி) மற்றும் வினைய பீடகம் (நன்னடத்தை கோட்பாட்டுப் பகுதி) ஆகிய 3 பீடகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த திரிபீடகம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மஹிந்த தேரரின் வருகையினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற பேறாகவும் மரபுரிமையாகவும் திகழ்வதுடன், இவ்வாறு கிடைக்கப்பெற்ற பௌத்த சமயம் அரச கௌரவத்தை பெற்று பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வளம்பெற்று வந்துள்ளது.

மகா சங்கத்தினரால் பல நூற்றாண்டுகளாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்டு வந்த திரிபீடகம் உலகில் முதல் முறையாக முதலாவது கிறிஸ்து வருடத்தில் மாத்தளை அலுவிகாரையில் ஆவணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டு விசேட திட்டமாக திரிபீடகம் முழுமையான நூலாக அச்சிடப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதுவாகும்.

ஒழுக்கப் பண்பாடான அறிவார்ந்த சமூகமொன்றை கட்டியெழுப்ப திரிபீடகம் பெரிதும் துணை செய்வதுடன், இன்று இலங்கையில் எம்மிடம் இருக்கும் பாளி மொழியிலான திரிபீடகம் இதுவரையில் உலகில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஆரம்ப பௌத்த நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இத்தகைய உன்னத மரபுரிமையான பௌத்த சமய போதனைகளை உள்ளடக்கிய திரிபீடகம் திரிபுபடுவதை தவிர்க்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இந்த உன்னத பணி மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த புண்ணிய நிகழ்வுகளுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள விகாரைகளில் சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.