திராவிடம் என்பது இனம் அல்ல, அது ஓர் இடம்: எச்.ராஜா

‘திராவிடம் என்பது இனம் அல்ல, அது ஓர் இடம்’ என பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்ச் சமுதாயத்தையும் இந்து மக்களையும் கால்டு வெல், ஜி.யூ.போப் ஆகியோரே பிரித்தார்கள் .

மதமாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கட்டுக்கதைகளை பரப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கால்டுவெல் சொன்ன திராவிடத்தை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் ‘திராவிடம் திராவிடம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் திராவிடம் என்பது ஓர் இடம். அது ஓர் இனம் அல்ல. எப்படி தமிழையும், சமஸ்கிருதத்தையும் பிரிக்க முடியாதோ அதேபோல் தமிழையும் இந்துவையும் பிரிக்க முடியாது. இரண்டும் இணைந்து இருக்கின்றன. இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது. ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

தமிழகத்தில் 36,000க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. அங்குள்ள அரிய சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன.

10 இலட்சம் கோடி ரூபாயில் கோயில் சொத்துகளை கொள்ளையடித்திருக்கிறார்கள். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். சிலைகளை கொள்ளையடித்தவர்கள் சிறைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்” என எச்.ராஜா கூறினார்.