தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்ததினம் யாழில் அனுஷ்டிப்பு

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்ததினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது

உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது முதலில் ஒருநிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஈகைச்சுடரை தியாகி சிவகுமாரின் சகோதரி ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து அன்னாரின் ஒளிப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகான சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான பொன். சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு இதேநாள் கோப்பாய் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சயனைட் அருந்தி தற்கொலை செய்திருந்தார்.

இதன்மூலம் ஈழப் போராட்ட வரலாற்றில் முதலாவது உயிரிழப்பாக பொன். சிவகுமாரனின் மரணம் இலங்கை தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.