தினகரன் குடும்பத்தை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை: ஜெயக்குமார்

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தாரை, மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லையென, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“டி.டி.வி.தினகரனை யாரும் அழைக்கவில்லை. அவராக கட்சிக்குள் வரும் நினைப்புடன் இருப்பினும் அது நடக்காது.

கிழக்கை உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும், தினகரனையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ கட்சிக்குள் இணைத்து கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, துணைவேந்தர்கள் பணம் கொடுத்து பதவியை பெற்றார்கள் என்ற ஆளுநரின் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் வழங்கிய அமைச்சர்

“பணம் கொடுத்து யார் பதவியை பெற்றிருந்தாலும், ஆளுநர் கூறுவது உண்மை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு பணம் கொடுத்து ஊழல் செய்தவர்கள் யார் என்ற விபரம் வெளிவருமானால் அது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.