“தாத்தாக்கள் ஹீரோவாக நடிக்கும்போது திருமணமான நடிகைகள் ஹீரோயின்களாக நடிக்க கூடாதா?”: கஸ்தூரி கேள்வி

நடிகை கஸ்தூரிக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்வார். இப்போதும் அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகை சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம் “திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள கஸ்தூரி “திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று சமந்தாவிடம் கேட்பவர்கள், ஏன் அதே கேள்வியை நாக சைதன்யாவிடம் கேட்பதில்லை” என்று கேட்டிருந்தார்.

அவ்வளவுதான் நெட்டிசன்கள் கஸ்தூரியை போட்டு தாக்கிவிட்டார்கள். “உங்களுடன் நடித்த ரஜினியும், கமலும் இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் முடியவில்லையே ஏன்? என்று ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி,

“நானும் அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன். தாத்தாக்கள் ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், திருமணமான பெண்களை ஹீரோயினாக நடிப்பதை ஏற்றுக் கொள்வதில்லையே ஏன்?”. என்று கேட்டிருக்கிறார்.

கஸ்தூரி யாரை குறிப்பிடுகிறார். விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன

LEAVE A REPLY