தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்களை பதவிவிலக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்.லூசியா தேவாலயத்தில், நேற்று நடந்த சிறப்பு ஆராதனையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், நாட்டுக்குத் தலைமை தாங்க தகுதியற்றவர்கள். அவர்கள் தமது பதவிகளை விட்டு விலக வேண்டும்.

இந்த அழிவு கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது. இது மக்களின் பாவங்கள் காரணமாக நடந்தது. இதற்கு சகோதர, சகோதரிகள் இரையானார்கள். இது ஒரு பேரிடி. இந்த வலியில் இருந்து என்னால் மீள முடியவில்லை.

இதற்கு அதிகாரிகள் மட்டுமன்றி, முன்னரே அறிந்திருந்தும், இதனைத் தடுக்கத் தவறிய நாட்டின் தலைவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் குற்றவாளிகளை நாம் தண்டிக்க வேண்டும்.

சிலர் சுதந்திரமாக இருக்கிறார்கள். பரிசுத்தமானவர்களாக நடிக்கிறார்கள். அவர்கள் மக்களால் தண்டிக்கப்படாவிட்டாலும் கடவுளால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.