தவறை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார் பிரதமர்!

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்துறை, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்துறை, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

குறித்த இரு அமைச்சுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான வரவுசெலவு நிதி ஒதுக்கீடுகள் 15 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக, 23 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் 14 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்தநிலையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.

நிதி செலவீன ஒதுக்கீடு, சபையில் தோல்வியடையக் காரணம், வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இல்லாதிருந்தமையே என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று இடம்பெற்ற தவறை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அமைச்சுகளுக்காக ஒதுக்கீடுகள், திருத்தங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனை பிரச்சினையாக கருத வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.