தவறாக வழிநடத்தப்பட்ட மக்களின் உளநலத்தை உறுதிப்படுத்துவதே சவால் -பிரதமர்

தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்லாது, தவறாக வழிநடத்தப்பட்ட மக்களின் உளநலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது முன்னால் இருக்கும் சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவு பிரஜைகள் பலர் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், சில அடிப்படைவாதிகள் அவர்களின் மத்தியில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து வருவதாகவும் பிரதமர்தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிய தொழில்நுட்ப முறைகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட்டுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) அளரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பிலேயே பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம், இலங்கையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மேற்கொள்ளும் நடவடிக்கையை மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் பாராட்டியுள்ளார்.

அறிவியலாளர்களாக தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும் முஸ்லிம் இளைஞர்களின் புரட்சிகர எழுச்சி, இலங்கையில் மட்டுமல்ல, மாலைதீவிலும் காணப்படும் நிலைமை என வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிபுணத்துவ அறிவை பரிமாறிக்கொள்வது முக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேச எல்லைகள் அல்லது மத கற்பித்தல்களை கவனத்தில்கொள்ளாது சர்வதேச பயங்கரவாதம் செயற்படுத்தப்பட்டுவரும் இப்படியான சந்தர்ப்பத்தில் முழு உலகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஷாயிட் கூறியுள்ளார்.