தவராசா ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்!

மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவருடன் மற்றுமொரு தமிழரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த சட்டத்தரணி அருணாசலம் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

குறித்த 25 ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

1981ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட கே.வி.தவராசா சுமார் 38 வருடங்கள் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தவராவார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முதலாவது வழக்கான குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோருக்கு எதிரான வழக்கு முதல், அரசியல் கைதிகளின் வழக்கு வரை நூற்றுக்கணக்கான வழக்குகளில் இவர் முன்னிலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதுமாத்திரமின்றி மனித உரிமைகளுக்காக கொழும்பில் துணிச்சலுடன் குரல் எழுப்பிய சட்டத்தரணி தம்பதிகள் என்ற பெருமை கே.வி.தவராசாவிற்கும், அவரது பாரியார் கௌரிசங்கரி தவராசாவிற்கும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.