தற்போதுள்ள பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகளை சீர்திருத்துவது குறித்து அமைச்சர் கலந்துரையாடல்

நாட்டின் கல்வி முறையின் முன்னேற்றம் குறித்து மாகாண ஆளுநர்களுடன் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது தற்போதுள்ள பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளைத் திருத்துவதற்கு அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கொள்கைகளை வகுத்தல் மற்றும் செயற்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை வேறு என்பதனால், முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாடு முழுவதும் 1,000 தேசிய பாடசாலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்தோடு இந்தக் கூட்டத்தில், பொருள் உள்ளடக்கம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கிடையேயான தொடர்புகள், கல்விச் செயற்பாட்டின் பல்வேறு கட்டங்களில் தொழிற்கல்வித் திட்டங்களுக்கான அணுகுமுறையை உருவாக்குதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.