‘ தயான் தூதுவர் பதவிக்கு பொருத்தமற்றவர் ‘

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக அரசியல் பேச்சாளராக கடமையாற்றுவதால், அவர் நாடாளுமன்ற சிறப்புச் சலுகைகள் மற்றும் தூதுவர் பதவி தொடர்பான ஒப்ப​ந்தத்தையும் மீறியுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தயான் ஜயதிலக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சதி முயற்சிக்கு சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர்களை விட அதிகமாக கருத்துக்களை வெளியிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இராஜதந்திரிகள் சிறப்புரிமைச் சட்டத்தின் கீ​ழான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருக்கு தூதுவர் பதவியை வைத்துக்கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாததென்றும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் குழு சபையில் கலந்துரையாட வேண்டும் எனவும், இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் தான் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.