தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது – சி.வி.

தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் முன்வைப்பது மிகவும் அவசியமானதென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ‘எழுக தமிழ் எழுச்சிப் பேரணி’ நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணி தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நேற்று (சனிக்கிழமை) யாழ். நூலக கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல்கள் வரும் நிலையில், தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகள், மனோநிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பது மிகவும் அவசியமானது.

அதற்கமைய அதி அவசரமான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பேரணியை நடத்தவுள்ளோம். ஆட்சியாளர்களால் இதுவரை கவனிக்கப்படாத ஆறு விடயங்கள் எமது பேரணியில் வலியுறுத்தப்படவுள்ளன. அவையாவன,

1.எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

2.சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும்.

5.வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயே முகாம் இட்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது.

6.இடம்பெயர்ந்த எம்மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.

இந்த ஆறு விடயங்களே எமது பேரணியில் முக்கியமாக கூறப்படப்போகும் விடயங்களாகும்.

எங்கள் பேரணியில் தமிழ் மக்களின் மாபெரும் சக்திகளாக விளங்கும் அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், மதபீடங்கள், மேற்கத்தைய மற்றும் சுதேச வைத்திய சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரிய அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள், தமிழர் மரபுரிமைப் பேரவை, தொழிற் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய, கடற்றொழில் சங்கங்கள், சமாசங்கள் போன்ற அனைத்து அமைப்புக்களும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாய் ஒன்றுசேர வேண்டும்.

யாவரும் திரண்டெழுந்து தமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்கு வேகம் கொடுக்க முன்வர வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.