தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்

தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதற்கும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குமுரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு, அம்பாறை மாவட்ட தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பா.அரியநேத்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் ஆரம்ப காலத்தில் தமிழ்பத்திரிகையொன்றில் ஒப்பு நோக்குபவராக பணிபுரிந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் பிரித்தானியா தூதரகத்தில் பணியாற்றினார். பின்னர் அவர் பிரித்தானியாவிற்கே சென்று அவுஸ்ரோலியாவைச் சேர்ந்த அடேலை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

பின்னர் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கெரிலாபோர் யுக்தி எனும் ஒரு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். 1986 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்திலே அந்த நூலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாசித்துள்ளார்.

அப்புத்தகம் பிரபாகரனை ஈர்திருந்தது. அதனூடாகத்தான்பிரபாகரன் அன்ரப் பாலசிங்கத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அவர் அவ்வியக்கத்திலும் இணைந்து கொண்டார். அவர் இந்தியாவிலே இருந்து கொண்டு தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு பல பயிற்சிகளை வழங்கி வந்தார். பின்னர் வீரம் செறிந்த இயக்கத்திற்கு விவேகத்தைக் கொடுக்கும் ஒரு ஆசானாக அன்ரன் பாலசிங்கம் அவர் இறக்கும் வரையில் செயற்பட்டு வந்தார்.

தேசத்தின்குரல் அன்ரப் பாலசிங்கத்தினால் 1986 காலப்பகுதியிலே வடக்கு கிழக்கு தொடர்பாக எழுதப்பட்ட ஆக்கபூர்வமான விடயங்களோடு, அவர் திம்பு பேச்சுவார்தையிலும் கலந்து கொண்டார். பின்னர் இலங்கை அரசுடனான பேச்சுவார்தைகள், சர்வதேசத்தினுடனான பேச்சுவார்தைகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச செயற்பாட்டாளர், என பலவற்றிலும் அவர் பங்கேற்று வந்துள்ளார். இவரின் செயற்பாட்டை உலகத்தலைவர்க்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.

அன்ரப் பாலசிங்கம் இணைந்த வடக்கு- கிழக்கின் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்ட்டி அடிப்படையிலான தீர்வும் பெறவேண்டும் என பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தார்.

கடந்த 2009 மே 18 இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனத்திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கின்ற செயற்பாட்டை ஏற்கனவே சர்வதேசத்தினூடாக மேற்கொண்டு வந்த புத்திஜீவிதான் அன்ரன் பாலசிங்கம். இவரை நினைவு கூரவேண்டியதன் தேவை உலகத் தமிழர்களுக்கு உள்ளது.

இதேவேளை தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வருகின்ற 18 ஆம் திகதி 70ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

எனவே தந்தை செல்வாவின் காலத்தில் இப்பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வுகண்டிருந்தால் அநியாயமாக தமிழ் இளைஞர்கள் அயுதமேந்தி இறந்திருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்கால் வரைக்கும் தமிழ் மக்கள் இறந்திருக்கமாட்டார்கள். இவை அனைத்திற்கும் முழுப் பொறுப்பும் இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்.

அத்துடன் இன்றுவரை தமிழ் மக்கள் ஒரு ஏமாற்றப்பட்ட இனமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தற்போது இலங்கையில் பதிய ஜனாதிபதி வந்துள்ளார். மூன்று இன மக்களையும் ஒரே பார்வையில்தான் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே சர்வதேச ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சனை சென்று கொண்டிருப்பதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள், தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுப்புகள்தான் காரணமாகும். இவையனைத்திற்கும் அடித்தளமிட்டவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்தான்.

மேலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவிக்கின்ற அரசில் உரிமையை தமிழ் மக்களுக்கும் தரவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

இதைத்தான் தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிகளிலும் பிரதிபலித்துச் சொல்கின்றார்கள். எந்தவொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், தமிழ் மக்களுக்கு குரோதங்கள் இல்லை. மாறாக 70 வருடங்களாக இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கைகதான் தொடர்கின்றன. இதனை தற்கால இளைஞர்கள் நன்கு அறிந்து செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.