தமிழ் மக்களை அரசாங்கம் நம்பவில்லை – வடமாகாண முதலமைச்சர்!

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை மூடுவதற்குப் பின்னடிப்பது தமிழ்மக்களை அரசாங்கம் நம்பவில்லையென்பதையே சுட்டி நிற்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் மல்வத்தபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும்போது வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமையானது அச்சுறுத்தல் எனத் தெரிவித்தமை தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் வடக்கில் இராணுவப் பிரசன்னம் தேவையில்லை.

2009ஆம் அண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ். குடாநாடு உட்பட வடக்கிலிருந்து குறிப்பிடத்தக்களவிலிருந்து இராணுவப் பிரச்சனம் குறைக்கப்படவில்லை.

வடமாhணத்தில் இன்றும் 60,000ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பு இராணுவத்தினர் வசமுள்ளது. இதுவரை 5,000 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் எத்தனை பிரிகேட் படையினர் நிலை கொள்ள முடியும் என்று முடிவு செய்யும் அல்லது பரிந்துரைக்கும் வேலை என்னுடையது அல்ல.

ஆனால், காவல்துறையினரது பிரசன்னத்தை அதிகரித்துக்கொண்டு இராணுவப் பிரசன்னத்தை அரசாங்கத்தினால் குறைக்கமுடியும். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் தேவையிருந்தால் காவல்துறையின் பிரசன்னத்தை இரண்டு மடங்காக்கமுடியும்.

தற்போது இராணுவத் தளபதியாக இருக்கும் மகேஸ் சேனநாயக்கவை யாழ். கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டிருந்த நேரம் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பது தொடர்பாகப் பேசியிருந்தேன்.

வடக்கில் இராணுவத்தினரின் இருப்பானது, நல்லிணக்க செயல்முறைகளுக்கு தடையாக உள்ளதுடன் தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

வடக்கில் இராணுவத் தளங்களை மூட மறுப்பதானது, தமிழ் மக்களை அரசாங்கம் நம்பவில்லையென்பதையே சுட்டிநிற்கின்றது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY