தமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சி; ரணில் தரப்பின் திடீர் அறிவிப்பு!

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய, 9 ஆவது பிரிவில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அரசியலமைப்பில், அரசு தொடர்பான பிரிவில், சிறிலங்காவை ஒரு ஒற்றையாட்சி அரசு என்று, சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் குறிப்பிடுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.