தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இனியும் கூற முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான அடிப்படை தேவைகள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பல்வேறு மாகாணங்களிலும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்டு பேசிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”உங்களது ஆட்சிக் காலத்தில் வடக்கிற்கு எவ்வித அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் வடக்கிற்கான பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து மன்றில் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த அமரவீர, ”வடக்கில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்றால் அது மகிழ்ச்சியானது. அதனை ஜெனீவாவிற்கும் போய் சொல்லுங்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வாய்களினால் கூறச் சொல்லுங்கள். வடக்கிற்கான அனைத்து வசதிகளையும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா செய்துக் கொடுத்துள்ளாரா என நாம் வடக்கு மக்களிடம் கேட்கவுள்ளோம். அவ்வாறு அவர் செய்திராவிடின் அவரை வடக்கிற்கு அனுமதிக்காதிங்கள். அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது வடக்கு பூரணமாகியுள்ளது. ஆனால், தெற்கில் எமக்கு அந்த நிலை இல்லை. அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இனியும் கூற முடியாது. வடக்கில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் 25 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ நாம் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து, உறவுகளை பறிகொடுத்து தற்போதுவரை தமது உறவுகள் எங்கே என தெரியாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

அரசாங்கத்தின் உதவிகளும் எமக்கு கிடைப்பதில்லை என்பதோடு தாம் வறுமையிலேயே வாழ்கின்றோம். எமது நிலையை கருத்திற்கொண்டு தமக்கு உதவி செய்ய நல்லுள்ளம் படைத்தவர்கள் முன்வரவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.