தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்! – சரத் பொன்சேகா

sarath-fonseka-380-seithy தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் விரிசல்கள் ஏற்படும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை நான் முன்னரே தெரிவித்துள்ளேன். யுத்தத்தில் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு எம்மிடம் இருந்தது உண்மையே. நாட்டை காப்பாற்றவும் மூவின மக்களை அமைதியாக வாழவிடவும் அந்த காரியத்தை செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருந்தது. ஆனால் இன்று உள்ள சூழலில் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று உருவாகக்கூடிய சூழ்நிலை இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.

யுத்த காலகட்டத்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் வடக்கில் பலரை கைது செய்தோம். அதேபோல் புலிகளுடன் தொடர்புடைய ஆயுதமேந்தி போராடிய பல்லாயிரக்கணக்கான நபர்களை கைதுசெய்தோம். இதில் உண்மையில் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்களும் இருந்தனர். அதேபோல் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளும் இருந்தனர்.

ஆனால் நேரடியாக புலிகளில் இணைந்து செயற்பட்ட 12ஆயிரம் நபர்கள் மஹிந்த அரசாங்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சாதாரண சமூகவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட தமிழ்க் கைதிகளை இத்தனைகாலம் தடுத்து வைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதேபோல் அவர்களை விடுவிப்பதால் நாட்டில் எந்தவித குழப்பங்களும் ஏற்படப்போவதும் இல்லை.

மேலும் இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நல்ல நம்பிக்கையை வைத்துள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் மீது இருந்த வெறுப்போ, சந்தேகமோ இந்த ஆட்சியாளர்கள் மீது இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் விரிசல்கள் ஏற்படும்.

மேலும் புலம்பெயர் அமைப்புகளை இலங்கையில் அனுமதிக்காது அவர்கள் மீதான தடைகளை விதித்திருந்தமை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே என்பது உண்மைதான். சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் பயங்கரவாத அமைப்புகளும் இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும் இப்போது புலம்பெயர் அமைப் புகள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இது நாட்டை எந்தளவுக்கு பாதுகாக்கும் என்பது சந்தேகமே. எனவே அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் கூடிய கவனம் எடுத்து தேசிய பாதுகாப்பு சீரழியாத முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY