‘தமிழ் மக்களின் அழுகுரலை சொந்த குரலில் கேட்கின்றேன்’ – சுரேன் ராகவன்

தமிழ் மக்களின் அழுகுரலை தனது சொந்த குரலில் கேட்பதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 32 வருட வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் மொழி ஆளுநர் நான். அதனால், தமிழ் மக்களின் அழுகுரலை எனது சொந்தக் குரலில் கேட்கக்கூடியவாறு உள்ளது. இந்த நியமனத்தில் ஜனாதிபதியின் ஒரு அரசியல் சமிக்ஞை உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

குறிப்பாக இலங்கை பல கலாசார மற்றும் பல மொழியியல் சமுதாயத்துடனான ஒரு நாடாகும். மேலும் தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஒரு பிரிக்க முடியாத நாட்டில் சந்தித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த நியமனத்தால், வடக்கு தமிழ் மக்களின் அழுகை மற்றும் வேண்டுகோளை அவர்களது சொந்த மொழியில் என்னால் கேட்க முடியும். அது சமூக குணமாகும். அத்தோடு மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் எனது முன்னுரிமை இருக்கும்.

இந்தியாவில் சுமார் 100,000 இலங்கை அகதிகளை இன்று நாம் கொண்டுள்ளோம். அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதற்கான உரிமை உண்டு. இங்கு கேள்வி என்னவென்றால், அவர்கள் திரும்பி வந்தால் எங்கே தங்கலாம்? அவர்களுக்கு நிலம் தேவை.

யுத்தம் முடிவடைந்த 2009இல் இருந்து இன்றுவரை இராணுவம் அரச நிலத்தையும், தனியார் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. 2010இல் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் தனியார் மற்றும் அரச காணிகள் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட இந்த நிலங்களின் உகந்த பயன்பாட்டிற்காக நாம் திட்டமிட வேண்டும். அத்தோடு இடம்பெயர்ந்த மக்களை இங்கு மீள்குடியேற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

சிலர் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்கள் மீனவர்கள் என்றால், கடலுக்கு அருகில் நிலங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் சில மூலோபாய காரணங்களுக்காக இராணுவம் கடற்கரையோர நிலத்தை விடுவிக்க முடியாது என்றால், இடம்பெயர்ந்தோர் மாற்று இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

இப்பகுதியில் 65,000 வீடுகள் போரில் சேதமடைந்துள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் கட்டுவதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக இல்லை. இன்று, வடக்கு அபிவிருத்தி முன்னுரிமை பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 16,000 முன்னாள் போராளிகள் உள்ளனர்.

இங்குள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அடிமட்டத்தில் உள்ளனர். ஆகையால், எனது கவனம் விவசாய மற்றும் கடற்தொழில் பக்கம் இருக்கும்” என கூறியுள்ளார்.