தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர!

நாட்டில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தையிட்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திரக் கட்சி தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள அரசாங்கத்தில் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்துவதே பிரதான இலக்காகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மக்கள் 30 வருடகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தெற்கு மக்களைப் போன்ற வாழ்கையை வாழவில்லை.

இந்த யுத்தத்தின் அனுபவங்கள் மக்களுக்கு அதிகமாக இருக்கும். நாம் அமைதியாக தூங்கிய போது நீங்கள் அச்சத்துடன் தான் தூங்கியிருப்பீர்கள்.

வெடிச்சத்தங்களுக்கு பழகியிருப்பீர்கள். இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்காக நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

இது சிங்கள பேரினவாதத்தினாலோ வடக்கின் பேரினவாதத்தினாலோ வந்த விளைவு அன்றி, மக்களுக்கிடையிலான போரினால் ஏற்பட்ட விளைவாகவே இதனை நான் கருதுகிறேன்.

எந்தவொரு அரசாங்கமும், மக்கள் ஆயுதமேந்துவதை விரும்பாது. இதனாலேயே, ஆயுதப் போராட்டத்தை நிறைவுக்குக்கொண்டுவர அரசாங்கம் முனைந்தது.

தற்போது இங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. ஆனால், மக்கள் எதிர்ப்பார்க்கும் பூரணமான சுதந்திரம் கிடைத்துவிட்டதா எனும் கேள்வி எழுகிறது.

வாழ்வாதாரத்தை சீராக்கி, சிறப்பானதும் மகிழ்வானதுமான வாழ்கையை வாழ்வதே என்னைப் பொறுத்தவரை சுதந்திரமாக கருதப்படுகிறது.

இதற்கு வடக்கு மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தில் இது முக்கியமான விடயமாகக் கருதப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.