தமிழ் தேசியம் தோற்கடிக்கப்படவில்லை: தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு பதிலடி

நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லையென வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைக்காலமாக தமிழ் தேசிய அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றது.

இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இது அதிசயமான கருத்து, இந்த தேர்தலில் யாழ். மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ் தேசியம் எந்த வகையிலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. தமிழ் தேசியம் அதே நிலையில் தான் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இது ஒரு உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும் எல்லாருமே தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் ஆட்கள் மாறி இருக்கிறார்களே தவிர கோட்பாடுகளோ அல்லது தமிழ் தேசியமோ மாறவில்லை. எங்களை விட்டு பிரிந்தும் செல்லவில்லை.

ஏதோ ஒரு வகையிலே தேர்தல் காலத்தில் சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. சில இடங்களில் மூலைமுடுக்குகளில் சிலர் வாக்கு வங்கியினை சேகரித்துள்ளார்கள்.

அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதுவே எங்களுடைய அரசியலாக இருக்க முடியாது.

ஆகவே நாங்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியம் சார்ந்து எல்லாரும் போராடுவோம். விமல் வீரவன்ச கூறுவதைப்போல எமது தமிழ் தேசியம் தோற்றுவிட்டது அல்லது தோற்கடித்து விட்டோம் எனக் கூறுவது தவறான விடயம் என தெரிவித்துள்ளார்.