தமிழ் அரசியல்வாதிகள் அனைவரோடும் இணைந்து பயணிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்

தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் எதிர்பார்ப்புக்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு, புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரோடும் இணைந்து பயணிக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழர்களின் பண்பாடு, கலை, கலாசாரம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் தமிழர்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பண்டிகை இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்கமான பிணைப்பினை வெளிக்கொண்டுவரும் மிகச் சிறந்த பண்டிகை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.