தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குத் தடை! – கூட்டமைப்பு அஞ்சுகிறது என்கிறார் சுரேஸ்

உள்ளூராட்சி த் தேர்தலில் “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயரை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில், “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயர், தமது கட்சியின் பெயரை ஒத்ததாக உள்ளது. ஆகவே இந்த பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயருக்கு தடை விதித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் தேர்தல் ஆணையாளர் இது தொடர்பில் எமக்கு கடிதம் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழரசுக்கட்சியின் செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுகின்றோம். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயர் எமக்கு இடையூறாக இருக்கின்றது. ஆகவே இந்த பெயரை தடை செய்யப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இவ்விரு கட்சிகளுமே பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். ஆகவே இவரது கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையாளர் செயற்படுவாரானால் அது தமிழரசுக்கட்சியினரை திருப்திப்படுத்தும் செயலாகவே தாம் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எமது தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பைக் கண்டு மிரண்டு போய், அச்சப்பட்ட காரணத்தினாலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY