தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் – எம்.கே.சிவாஐிலிங்கம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்டக் குழு தீர்மானதித்துள்ளதாகத் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஐிலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல் அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனை மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்த கொண்டிருக்கின்றனர்.

அந்த அடிப்படையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு கூடி நம்பிக்கையில்லாப் பிரேரனையிலே தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, ஒருவர்கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கூறவில்லை” என தெரிவித்தார்.